வடகாடு வய்க்கால்


(அடுத்த முறை ஊருக்கு சென்றால்,  புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்ளவும்)

1924 ஆம் ஆண்டு மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ஸ்டான்லி நீர்தேக்கம் கட்டும் பணி அன்றைய ஆங்கிலேய அரசினால் தொடங்கப்பட்டது. இந்நீர்தேக்கம் ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம்,ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம்,காரைக்கால் மாவட்டம்,சேலம், தென்னாற்காடு,கடலூர்,இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் உள்ளடக்கிய நிலப்பகுதிகள் பாசன வசதியைப் பெறும் நோக்கில் திட்டம் உருவாக்கப்பட்டது.

அதன்படி தொடங்கப்பட்ட கட்டுமானப்பணி நிறைவுபெற 1937 ஆண்டுவரை காலம் எடுத்துக்கொண்டது.இந்த பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே பாசனவசதியைக் கொண்டுசெலுத்தும் கட்டுமானப்பணியும் முடுக்கிவிடப்பட்டது.

இதன்தொடர்ச்சியாக முக்கம்பு என அழைக்கப்படும் பகுதியில் வந்துசேரும் மூன்று துணை ஆறுகளின் நீரைக் கையாள தேவையான மதகுகள் அமைக்கப்பட்டு காவிரியிலும் கொள்ளிடத்திலும் நீரை திருப்பிவிடும் வகையில் தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவ்விரண்டு ஆறுகளும் கல்லணைக்கு முன்பு ஒன்று சேர்கின்றன.

கல்லணை என்பது நீரை மிகுந்த அளவு தேக்கிவைக்கும் தன்மையுடையது இல்லை.அது வரும் மொத்தநீரையும் ஒருங்கிணைத்து 5 கிளை ஆறுகளின் வழியாக விவசாயத்திற்கு நீரை பிரித்துவிடும் படுகைஅணையாகவே செயல்படும் விதம் சோழமன்னன் கரிகாலனால் வடிவமைக்கப் பட்டிருந்ததை அப்படியே சில தொழில்நுட்ப மாற்றங்களை மட்டும் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

 இக்கல்லணையிலிருந்து ஏற்கனவே கிளை ஆறுகளாக இருந்த காவிரி ஆறு,கொள்ளிடம், வெண்ணாறு,வெட்டாறு, குடமுருட்டி ஆறு ஆகியவற்றுடன் கல்லணைக்கால்வாய் எனப்படும் புதிய கிளை ஆறும் வெட்டப்பட்டு தஞ்சை மாவட்டத்தின் தெற்கு பகுதி மற்றும் இராமநாதபுரம் மாவட்டதின் வடக்குப்பகுதிகள் பாசனவசதி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

கல்லணைக்கால்வாய் புதுவாய்க்காலின் பிரிவுவாய்க்கால்கள் கல்யாணஓடை வாய்க்கால், வடகாடு வாய்க்கால், சேதுபாவாசத்திரம் தாய்வாய்க்கால் போன்றவைகள் ஆகும். இதில் கல்யாணஓடை வாய்க்கால் உறந்தராயன்குடிக்காடு பகுதியில் பிரித்து விடப்பட்டுள்ளது.

வடகாடு வாய்க்கால் எனப்படும் நம் பகுதியில் பாயும் வாய்கால் புலவன்காடு என்னும் இடத்தில் தொடங்குகிறது. அங்கிருந்து வெள்ளூர், ஆலத்தூர், தளிக்கோட்டை, நாட்டுச்சாலை, வெண்டாக்கோட்டை,  காசாங்காடு, மன்னங்காடு,துவரங்குறிச்சி,செங்கபடுத்தான்காடு வழியாக மஞ்சவயல் வடகாடு பகுதியை சென்றடைகிறது.

இந்த வாய்க்கால் மேட்டுர் அணை கட்டப்பட்ட அதேகால கட்டத்திலேயே பணிகள் தொடங்கப்பட்டு 1937 ஆண்டுகளில் பணி நிறைவும் பெற்று பாசன பயன்பாட்டுக்கு பயன்படுத்த தொடங்கப்பட்டது. இவ்வாய்க்கால் தான் காசாங்காட்டின் மஞ்சுக்குப்பன் ஏரியின் நீர் ஆதாரமாகும். இதன்மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் அப்பகுதியில் பாசனவசதி பெறுகிறது.

இவ்வாய்க்காலின் குறுக்கில் காசாங்காடு-பட்டுக்கோட்டை சாலையில் அமைந்த எல்லைவழி பாலமும் (தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது), காசாங்காடு- கள்ளிக்காடு சாலையில் அமைந்துள்ள பாலமும் அதே காலகட்டத்தில் கட்டப்பட்டவைகள் ஆகும்.தெற்கு தெரு அருகில் ஒரு கலிங்கு எனப்படும் சருக்கையும் அமையப்பெற்று மண்ணரிப்பு தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் வடகாடு வாய்க்கால் மூலம் நம் பகுதிமக்களுக்கு கிடைத்த அரசின் பாசன வசதிக்கான நன்மை பயக்கும் திட்டம் ஆகும்.

மேலும் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் இப்பகுதியில் தங்கள் கருத்துகளையும் வெளிப்படுத்தவும்.
Comments