பரட்டையாம்வீட்டு மாவடி



கிராமத்தின் மையப்பகுதிக்கு நம் ஊர் மக்களால் வழங்கப்படும் பெயர் பரட்டையாம்வீடு மாவடி என்பதாகும். இப்பகுதியில் தான் கிராமத்தின் முக்கிய ஆலோசனைக்கூட்டங்கள் கூட்டப்படுகின்றது. கிராமத்தின் முக்கிய முடிவுகள் இங்குதான் எடுக்கப்படுகின்றன. கிராமத்தின் முக்கிய அலுவலகங்கள் குறிப்பாக பஞ்சாயத்து அலுவலகம், பொது வழங்கல் அங்காடி, தபால் நிலையம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், அரசு கிராம உதவி மருத்துவமனை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், பகுதிப் புகழ் பெற்ற நடராஜன் கறிக்கடை, கிராமத்திலேயே உள்ள 15 மணி நேர தேநீர் கடை, ஊரின் ஒரே அரிசிக்கடை மற்றும் முடித்திருத்தகம் என அ முதல் ஃ வரை இந்த இடத்தில் தான் கிடைக்கும்.

பெயர்க்காரணம்:

1947 ஆம் ஆண்டுகள் வாக்கில் நம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் முதலாம் குடமுழுக்கு விழா வேத விதிகளின் படி நடைபெற்றது. அன்றைய தினம் அதன் நினைவாக நடுத்தெரு பரட்டையாம்வீட்டு ஐயா. ரெங்கா அவர்கள் தமக்குச்சொந்தமான இந்த இடத்தில் மாங்கன்று ஒன்றை நட்டார். அது காலப்போக்கில் செழித்து வளர்ந்து பெரிய மரமானது. அது அப்பகுதியில் நிழல் தரும் -கனிதரும் மரமாகத் திகழ்ந்தது.அம்மரத்தின் அடியில் ஊரின் முக்கிய விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்தல் மற்றும் ஊர்வளர்ச்சி குறித்த விவாத கூட்டங்கள் நடந்தன.

1967 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அறிஞர் அண்ணாவின் அரசு நம் பகுதியில் சில ஊர்களில் மேல்நீர் நிலைத்தொட்டி கட்ட அனுமதி வழங்கியது. நம் ஊருக்கும் அதற்கான திட்ட ஒதுக்கீடு கிடைக்கபெற்றது. அதற்கான இடம் வழங்க ஐயா. வீராசாமி அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு அவரால் மனமுவந்து மாமரம் இருந்த பகுதி (15 குழிகள்-செப்பேட்டு பட்டாவின்படி)
கிராமத்திற்கு விட்டுக்கொடுக்கப்பட்டது. இப்பகுதியில் தற்போதைய தபால் நிலையக் கட்டிடமும்(பழைய பஞ்சாயத்து அலுவலகம்) அமைந்துள்ளது.

காசாங்காடு கிராமத்தின் நலன் கருதி தங்களுடைய நிலப்பகுதியை பொது நிலப்பகுதியாக மாற்றித்தந்த பரட்டையாம்வீட்டு நில உரிமைதாரர்களுக்கு கிராமத்தின் சார்பில் நன்றிகள் பல.

திருத்தங்கள், பிழைகள்  அல்லது மேலும் தகவல்  இருப்பினும் தெரியபடுத்தவும்.
Comments