1985 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் திரு. சி.தியாகராஜன் அவர்களால் பரட்டையாம்வீடு மாவடி அருகில் குறிஞ்சி மளிகை பக்கத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. தொடங்கி சில மாதங்களில் அரசின் பதிவினைப் பெற்று பதிவுபெற்ற கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமாக மாற்றம் பெற்றது. அந்த ஆண்டில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் வழக்கறிஞர் திரு. சி.தியாகராஜன் தலைமையிலான குழு வெற்றி பெற்றது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 வருடங்களுக்குப் பிறகு நடந்த தேர்தலிலும் அவரே மீண்டும் தலைவரானார். அவர் தலைமைப் பொறுப்பில் இருந்த காலகட்டங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையின்றி பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. நிலமற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கும் இந்தியன் வங்கி மூலம் (IRDB) கடன் உதவி பெற்றுத்தரப்பட்டு அதன்மூலம் கறவை மாடுகள் வாங்கிதரப்பட்டன. இதனால் ஏழை நடுத்தர குடும்பங்கள் பயனடைந்தன. 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற அடுத்ததேர்தலில் திரு.கோ.சாமிநாதன் தலைமையிலான குழுவினர் வெற்றிபெற்றனர். அதன் மூலம் அவர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வமைப்பு 5 ஆண்டுகாலம் தன் சேவையை பால் ஊற்பத்தியாளர்களுக்கு வழங்கினார்கள். 2001 ஆம் ஆண்டில் முதல்வராக பதவியேற்ற செல்வி.ஜெ.ஜெயலலிதாவால் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு 2003 வரை மேற்படி குழுவே சங்க பொறுப்புகளை கவனித்துவந்தது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் முன்பு இயங்கிய இடத்திலிருந்து கடந்த 1997 ஆம் ஆண்டு புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இக்கட்டிடம் கடந்த 1996 ஆம் ஆண்டு பெறப்பட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்றது. இது புதிய பஞ்சாயத்து அலுவலகம் அருகில் (மார்த்தாம்வீடு ஐயா நிலப்பகுதியில்) கட்டப்பட்டது. இடைக்காலத்தில் 2007 ஆம் ஆண்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டு இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் அந்தத் தேர்தல் செல்லாது என அரசு அறிவித்தநிலையில் நம் ஊரின் தேர்தலும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினால் மட்டுமே சங்க நடவடிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கமுடியும் என்ற சட்ட விதிகளால் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக் கணக்கான கூட்டுறவு சங்கங்கள் செய்வதறியாது இருக்கின்றன. இதில் காசாங்காடு கிராம கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமும் அடங்கும். பின்னர் தமிழ் நாடு முழுவதும் உள்ள சங்கங்கள் செயலாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. இன்று வரை அத்தகைய சூழலே நிலவுகிறது. இக்காலகட்டங்களில் செயலாளர்களின் அதிகார போக்குகளால் பண பட்டுவாடா சரிவர நடைமுறைப் படுத்தப்படாமல் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை பற்றிய மேலும் தகவல்கள் தங்களுக்கு தெரியுமேனின் பகிர்ந்து கொள்ளவும். |
அரசு அலுவலகங்கள் >